Feb 22, 2010

கொடியேற்றம் -அசோகமித்ரன்.

அசோகமித்ரன்.

நான் பள்ளியில் எட்டாவது வகுப்பு வரும்வரை சுல்தான் பஜார் என்று ஒன்று இருப்பதே தெரியாது. எங்கள் வீட்டிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் இருந்த அந்த இடத்தை நான் ஒரு பாடபுத்தகத்தைக் காலாகாலத்தில் வாங்காததால் பழகிக் கொள்ளும்படி ஆயிற்று. சிகந்திராபாத்தில் இருந்த மூண்று புத்தகக் கடைகளிலும் 'சுல்தான் பஜாருக்கு போ ' என்று சொல்லி விட்டார்கள். அந்த நாளிலே மிகுந்த ஜனநெரிசல் இருந்த அந்தப் பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய அரசமரம் பரம சுதந்திரத்தோடு செழுங்கிளைத் தாங்கி நின்று கொண்டிருந்தது. ஒருமுறை சுல்தான் பஜார் சென்று வந்த பிறகு ஒரு பென்சில் வாங்க வேண்டுமென்றால்கூட எனக்கு அங்குதான் போகத்தோன்றியது. சைக்கிளில் அவ்வளவு தூரம் சென்று வருவது பெருமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த அரசமரத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவேன்.

1231327459_4836096f2f பத்தாவது வகுப்பில் இருக்கும்போது நாட்டு அரசியல் தீவிரமடைந்தது. கல்கத்தாவில் 'நேரடி நடவடிக்கை 'யில் தெருவெல்லாம் நூற்றுக்கணக்கில் பிணங்கள். சரியோ தப்போ பாகிஸ்தான் என்று ஒரு தனிநாடு உண்டாகாமல் இந்தியப் பிரச்சினை தீராது என்றாயிற்று. பாகிஸ்தான் உறுதி என்றான பிறகு நிஜாமுடைய ஹைதராபாத் சமஸ்தானம் என்னாகும் ? நிஜாமுடைய ஹைதராபாத் சமஸ்தானமாகவே இருக்கும் என்று நிஜாம் தீர்மானித்தார்.

ஆனால் நிறையப் பேர்வேறு அபிப்பிராயம்கொண்டிருந்தார்கள். ஹைதராபாத் ஒழுங்காக இந்தியாவுடன் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த நிஜாம் இவ்வளவு நாட்கள் வெள்ளைக்காரனிடம் 'விசுவாசமான சகபாடி என்று பட்டம் பெற்று வாழ்ந்தாயிற்று. இனி இந்தியாவின் நண்பன் என்று இருந்துவிட்டுப் போகட்டுமே.

எனக்கும் மதன்மோகனுக்கும் இவ்வளவெல்லாம் தெரியாது. சுதந்திரம் வரப்போகிறது. அந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று மூவண்ணக் கொடியை எங்காவது பொது இடத்தில் பறக்கவிட வேண்டும். எப்படியோ எங்கள் வீட்டில் ஒரு மூவர்ணக் கொடி வந்து சேர்ந்திருந்தது. அதை இப்போது பயன்படுத்திவிட வேண்டும்.

ஆனால் ஜஉலை மாதத்திலிருந்தே காங்கிரஸ், வந்தே மாதரம் போன்ற குரல் கேட்ட மாத்திரத்தில் நிஜாமின் போலீஸ்காரர்கள் தடியை உயர்த்தினார்கள். போலீஸ் மட்டுமல்லாது காசிம் ரஞ்வி என்றதொரு மனிதன் கூட்டிய ரஜக்கார் படை கதர் சட்டைக்காரர்களையும் கதர் குல்லாக்காரர்களையும் சாத்தியமான போதெல்லாம் தாக்கியது . பொதுவாகவே எல்லோருமே பயங்கண்டு இருந்தார்கள் இந்தச் சூழ்நிலையில் நாங்கள் மூவண்ணக்கொடியை எங்கு பறக்க விடுவது ? மதன்மோகனும் நானும் சிகந்திராபாத்திலேயே பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். பழகிய இடங்கள் என்பதாலேயே வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

'சுல்தான் பஜாரில் முயற்சி செய்யலாமா ? ' என்று கேட்டேன். அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் சைக்கிளில் கிளம்பினோம்.

ஜ்உலை, ஆகஸ்ட் மாதங்களில் அந்தப் பிரதேசத்தில் கொஞ்சம் மழை பெய்யும். நிறையக் காற்று அடிக்கும். எத்திசையில் போனாலும் எதிர்க்காற்று வீசுவதுபோல் இருக்கும். நாங்கள் இருட்டும் வேளையில் வியர்த்து விருவிருக்க சுல்தான் பஜார் போய்ச் சேர்ந்தோம்.

அங்கு ஏற்கெனவே அமளி. கதர் உடை கதர்குல்லா அணிந்துக் கொண்டு இரண்டு இளைஞர்கள் 'வந்தே மாதரம் ' 'இந்தியன் யூனியன் ஜிந்தாபாத் ' ' என்று கோஷம் போட்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்களை ஒரு டாங்கா வண்டியில் கைது செய்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்துப் பதினைந்து பேருக்கு தடியடி. நானும் மதன்மோகனும் சுல்தான் பஜார் சாலையில் நுழைந்தபோது ஈ காக்காதான் அங்கிருந்தன.

சுல்தான் பஜார் என்று சொல்லிவிட்டேனே தவிர கொடியை எங்கு, எப்படிக் கட்டுவது 1025_asokamitran3 என்று நினைத்துப் பார்க்கவில்லை. அங்கு போன பிறகுதான் அதிலுள்ள சிரமங்கள் தெரிந்தன. லாந்தல் கம்பத்தில் கட்டலாம். ஆனால் பிறர் கவனிக்காதபடி அதைச் செய்ய முடியாது. பட்டம் ஏதாவது அப்பக்கம் அறுந்து வந்து மின்சாரக் கம்பியில் சிக்கிக் கொண்டால் அதை எடுக்க முயற்சி செய்வது போல் கம்பத்தில் ஏறலாம். அறுந்தப் பட்டத்தைப் பிடிக்க யாருக்கும் சலுகைகள் உண்டு. ஆனால் எங்களுக்கென்று ஆகஸ்ட் 14-ம் தேதி அங்கு பட்டம் அறுந்து விழுமா ?

மதன் மோகனுக்கு உற்சாகம் குறைந்து போய்விட்டது சிகந்திராபாத்திலேயே 'கிளாக் டவர் ' அருகில் எங்கள் ஸ்கவுட் கம்பையே கொடிமரமாக்கிப் பறக்க விடலாம் என்றான். ஸ்கவுட் இயக்கத்தில் கொடிமரம் கட்டுவது ஒரு பாடம். எங்களுக்குக் கொடுக்கப்படும் தடிகளில் இரண்டை ஒன்றோடொன்றாகக் கட்டி இப் பாடத்தில் தேர்வு அடைவோம். எல்லா தெலுங்கு சினிமாக்களிலும் கிராமத்து ஆண்கள் கையில் ஆளுக்கொரு தடி வைத்திருப்பார்கள். எங்கள் ஸ்கவுட் தடி அது போன்றது. அதிகம் போனால் ஐந்தடி நீளமிருக்கும். இந்தத் தடி (அல்லது) கழியில் கொடியைக் கட்டுவதற்குப் பதில் நாங்களே அதைப் பிடித்துக் கொண்டு ஓடலாம்.

எங்களுடைய சுதந்திர தாகம் தணிந்து வீடு திரும்ப இருந்தபோது எனக்கு அரச மரம் ஞாபகம் வந்தது. 'வா மதன் நான் நல்ல இடம் காட்டுகிறேன், ' என்றேன்.

'நீ போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போறியே ? ' என்றான் மதன்மோகன்.

'அதுக்குப் பக்கத்திலேதான் நான் சொல்லற இடம் இருக்கு. '

'போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயா ? '

'வாயேன், பாக்கலாம். முடிஞ்சா செய்யறது. இல்லாட்டா விட்டுடறது. '

அந்த அரசமரம் போலீஸ் ஸ்டேஷன் ஒட்டி இருந்தது. அந்த மரத்தைச் சுற்றி புண்ணியம் அல்லது பலன் அடைய விரும்புபவர்கள் போலீஸ் ஸ்டேஷனையும் சுற்ற வேண்டும். இன்னொரு புறத்தில் அரச மரத்துக்கும் அடுத்த கட்டடத்துக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி. அங்கு ஆடுகள் நுழைந்து போலீஸ் ஸ்டேஷன் சுவர் மீதேறி வாய்க்கெட்டிய அரச இலைகளை தின்று கொண்டிருந்தன.

'அப்படியே மரத்து மேலே ஏறி ஏதாவது கிளையிலேந்து கொடியைத் தொங்க விடலாம். ' என்று நான் சொன்னேன்.

எங்களுக்கே அது நம்ப முடியாத்தாக இருந்தது. அந்த போலீஸ் ஸ்டேஷன் தளம் போட்ட கட்டடம் என்றாலும் மாடிப்படி கிடையாது. ஒருவன் எப்படியோ கூரை மீது ஏறி விட்டால் அவன் ஒரு எளிதாக யார் கண்ணிலும் படாமல் அரசமரத்தின் உயரக்கிளைகளை அடைந்து விடலாம் '.

அன்றே கொடியைக் கொண்டு வராமல் போனோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டோம். ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி மாலை கொடியுடன் சிறுது சணல் கயிறுடனும் வந்து இந்திய சுதந்திரத்தை வரவேற்க எங்களாலான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

ஆகஸ்ட் 13-ம் தேதி காலையிலிருந்தே மழை. பகலில் சிறிது நேரம் வெயில் அடித்தது. ஆனால் மறுபடியும் மழை பெரியதாகக் கொட்ட ஆரம்பித்தது.

நான் மழையில் நனைத்து கொண்டுதான் மதன் மோகன் வீட்டை அடைந்தேன். அவன் படுக்கையில் சுரமாகப் படுத்துக் கொண்டிருந்தான் என்று அவனுடைய அம்மா என்னைத் தெருவில் வைத்தே திருப்பி அனுப்பி விட்டாள்.

ஒரு கடையில் ஒண்டிக் கொண்டு தலையில் இருந்த மழை நீரை வழித்து உதறினேன். எனக்குத் தும்மல் வந்தது. அடுத்தடுத்து தும்மல் வந்தபடியே இருந்தது. காகிதத்தில் சுற்றி வைத்திருந்த மூவண்ணக் கொடியால் என் தலையை துடைத்துக் கொண்டு ஈரம் போகப் பிழிந்தேன். வண்ணம் வண்ணமாய் தண்ணீர் கொட்டியது. இப்படிச் சாயம் போகும் கொடியைக் கட்டினால் எதற்குக் கோபித்துக் கொள்வது என்று நிஜாம் போலீஸ் திணறும்.

இந்திய சுதந்திரத்தின் உதயத்தை நானும் மதன் மோகனும் சுரத்துடன் தான் வரவேற்றோம். அன்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு. யாரோ மூவண்ணக் கொடியை ஹைதராபாத்தில் ராவோடு ராவாகப் பறக்க விட்டிருக்கிறார்கள் ' போலீஸ் படையில் ஐந்தாறு பேர் சஸ்பெண்டு '

கொடி எங்கு கட்டப்பட்டது என்று அறிய நான் தவித்தேன். போலீஸ்காரர்கள் பாதிக்கபட்டிருந்ததால் சற்றுக் கடுமையாகத்தான் இருந்தார்கள். என் அப்பாவின் நண்பர் போலீஸ் காரியாலயத்தில் ரைட்டராக இருந்தார். அப்பாவுக்குத் தெரியாமல் அவரிடம் விசாரித்தேன். அவர் சுல்தான் பஜார் என்றதும் என் பரபரப்பை அடக்க முடியவில்லை.

'என்னடா ஆச்சு ' என்று கேட்டார்.

'போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலே இருக்கிற மரத்திலேயா மாமா ? ' என்று கேட்டேன்.

'உனக்கெப்படிடா தெரியும் ? ' என்று அவர் கேட்டார்.

என்னதான் இருந்தாலும் அவர் போலீஸ்காரர். நான் சொல்லவில்லை

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Unknown on December 5, 2018 at 11:52 AM said...

Good and thirilling,story may reveal the person by whom.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்