Feb 27, 2010

தெரியாமலே - கந்தர்வன்

கந்தர்வன்

இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில தினங்களில் அவர்கள் யாரும் தனியாய்ப் போகவில்லையென்றும் குழுக்களாய்ப் போய் வருவதையும் பார்த்தேன். என் பக்கத்து சீட் சாமிநாதன் இடம்பெற்ற குழுதான் இந்தக் குழுக்களிலேயே பெரியது என்று அவனோடு சிநேகமாகி அந்தக் குழுவோடு கேன்டானில் நின்றபோது தெரிந்தது.

தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் நாடு திரும்பியதில்லை. கேன்டானுக்கு எதிரே kantharvan உள்ள மைதான வெளியில் மூன்று நான்கு மரங்கள் பெரிது பெரிதாய் நிற்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து பரப்பப்பட்ட மர இனம் என்று அவைகளின் உயரத்தை அண்ணாந்து பார்த்து ஒருவர் சொன்னார். அந்த மரத்தடிக்குப் போய் நின்று முதல் நாள் மாலை தாங்கள் பிரிந்த பின்பிருந்து அந்த நிமிடம் வரை அவரவர் வீடுகளிலும் வெளியிலும் நடந்தவைகளை செய்திகளாகவும் அதிசயங்களாகவும் கதைகள் போலவும் பேசுவார்கள். எதையும் வெகு சுவையாகச் சொல்பவர்கள் என்று எங்கள் குழுவில் இரண்டு மூன்று பேர் உண்டு. பெரும்பாலும் அவர்களே கூட்டத்தை ஆக்ரமித்துக் கொள்வார்கள். கேட்கவும் பார்க்கவும் ஆசையாயிருக்கும்.

விதிக்குப் புறம்பாக வந்த பில்லை எப்படிக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்பினார் என்று சொல்லி யாராவது ஒருவர் தனது அறிவு மற்றும் சூட்டிகைகளை விளக்கிப் பேசுவதுதான் வழக்கமான மாநாட்டுத் துவக்கமாக இருக்கும். அதன் பின் அதிகாரி பற்றி அவர் குடும்பம் பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் பற்றி கண்ட காட்சிகள் பற்றி என்று மாநாட்டில் பேசுவதற்கென்றே தயாரித்து வந்த உரைகள் போல வரிசைக் கிரமமாகவோ முண்டியடித்துக் கொண்டோ பலரிடமிருந்து வெளிவரும். பெரும்பாலும் இந்த மரத்தடி மாநாடு வட்டவடிவிலும் நின்றபடியேயும் நிகழும்.

மூன்றாம் நாளே கவனித்தேன். எங்கள் வட்டம் தாண்டி ஒரு கிராமத்துக்காரர் மஞ்சள் பை ஒன்றைக் கையில் தொங்க விட்டபடி நாங்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டபடிநின்றார். முகத்தில் கவலை அதிகமாயிருந்தும், நாங்கள் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் நேரங்களில் அவர் உதட்டிலும் பொசுங்கலாய் ஒரு புன்னகை வந்து போனது. ரகசியமான சங்கதிகளை நாங்கள் மெது குரலில் பேசுகையில் அவர் எங்கள் வட்டத்தை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துக் காதோரம் கை வைத்துக் கேட்டு விட முயற்சிப்பார்.

நாங்கள் நாடு திரும்பிய ஒரு நாள் முற்பகலில் திரும்பிப் பார்த்தேன். அவர் பக்கத்திலிருந்த கோர்ட் கட்டிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் தாட்டியாயிருந்தார். பிற்பகலில் எங்கள் கூட்டம் ஆரம்பிக்கும் நிமிடத்தில் எங்கள் பேச்சைக் கேட்க வாயைத் திறந்தபடி மேற்கிலிருந்து வேகம் வேகமாய் வந்துநின்று கொண்டார்.

நாங்கள் முடித்துத் திரும்பிய ஒவ்வொரு வேளையிலும் எங்களை விட்டுப் பிரிந்து அவர் ஒருசமயம் கலெக்டர் அலுவலகப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருப்பார்; ஒரு நேரம் வக்கில் ஒருவரின் பின்னாடி பரிதாபமாய் நடந்து கொண்டிருப்பார். எனது ஊகம் என்னவெனில் கர்ணன் உடம்பின் கவச குண்டலம் போல் அவர் கையில் தொங்கிய மஞ்சள் பைக்குள் ஏதோ முக்கிய ஆவணங்கள் அல்லது விண்ணப்பங்களின் நகல்கள் ரசிதுகளென்று நிறைத்து வைத்திருந்தார் என்பதே ஆகும்.

எங்கள் குழு கூடும் மரத்தடி விரிந்த நிழல் கொண்டது. மஞ்சள் பூ மரம் அது. அதன் கிளைகள் அருகில் உள்ள வக்கீல்கள் கூடத்தின் மேற்கூரையில் பாதியை மூடியிருக்கும். இந்தப் பக்கம் கேன்டானின் தென்னங் கீற்றுகளின் மேல் அசையும் கோடையில் வெல்வெட் விரிந்து கிடப்பது போல் தரையெங்கும் பூக்கள் உதிர்ந்திருக்கும். வதங்கிய பூக்களிலிருந்து வாசம்வரும். பேசிக் கொண்டிருக்க ரம்மியமாயிருக்கும்.

அடிக்கடி பேச்சுகளில் ஊடாடுவது, காலம் முன்பு போய் மெதுவாய் நகர்வதில்லை என்பதும் வெகு வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான். நேற்றுதான் திங்கட்கிழமை வந்தது போலிருக்கிறது. அதற்குள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டது என்று அநேகமான வெள்ளி மாலைகளில் பேசுவதுண்டு. பேச்சில் அடிக்கடி வரும் இன்னொன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

'பெரிய சங்கதிகளை விடு. டிபன் பாக்ஸைச் சொல்லு. அதுகளை வரிசையா மேலெ மேலெ அடுக்கி மாலை மாதிரி ஒண்ணை மேலெ வைச்சு இதுலெ மாட்டி அதுலெ மாட்டிக் கடைசியா ஒரு கெட்டியான ஸ்பூன் ஒண்ணை மூணு துவாரத்திலெயும் சட்டுனு எவனாவது நொழைச்சிருப்பானோ; அதுதான் நொழைஞ்சிருமா ? ஸ்பூன் இல்லாம டிபன் பாக்ஸ் வரும்னு நெனைச்சிருப்பமா முந்தியெல்லாம்.

'எங்க தெருவுலெ புதுசா ஒரு கேபிள்காரன் வந்திருக்கான். அம்பது சானல் தரப் போறானாம். நெனச்சிருப்பமா பத்து வருசத்துக்கு முன்னெ ? '

'பஸ் ஸ்டாண்டுக்கு அப்பாலெ காலெஜ் வரை ஜனநடமாட்டமே இருந்ததில்லெ முன்னெயெல்லாம். இப்ப வீடுகளும் கடைகளும் பஸ்ஸ்உம் காரும் ஸ்கூட்டருமா ஜெக ஜோதியாயிருச்சு. '

'விடு கம்ப்யூட்டர் சங்கதியை ஆரம்பிச்சா கதை பத்து நாளைக்கு நீளும். நம்ம ஆபிஸ்லெ பத்து கம்ப்யூட்டர்கள் பிரிண்ட்டர், ஏர் கண்டிஷனர் எல்லாம் அடுத்த வருசம் வந்து எறங்கப் போகுது. அம்பது நூறு வருசமா தலையைப் போட்டு பிறாண்டி மாசாமாசம் கணக்கு அனுப்புற வேலையெல்லாம் இனி இல்லை. மிஷினலெருந்து வந்து கையிலெ விழுந்திரும் கோடி ரூபாய் கணக்கு.

பேசிவிட்டு நாடு திரும்பும்போது பார்த்தேன். மஞ்சள் பைக்காரர் வெகு சுவாரஸ்யமாய் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர் காக்கித் துணி மூடிய ஜீப்பில்லாமல் நவீனமான மாருதி ஜீப்பில் வந்து கொண்டிருந்த தாசில்தாரை நோக்கி ஓடினார். தாசில்தார் ஜீப்பிலிருந்து இறங்கும்போது அவர் தலைக்கு மேல் கைகளை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேரமில்லாமல் விறுவிறுவென்று கலெக்டர் ஆபீஸின் படிகளில் ஏறினார். டவாலி முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப்பின் மஞ்சள் பைக்காரர் கோர்ட் பக்கம் பார்த்து நடந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் எங்கள் மரத்தடியிலிருந்து சற்று தூரத்தில் செங்கல்லும் மணலும் லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. நவீன வசதிகளுடன் பலமாடிக் கட்டிடம் ஒன்று கட்டப் போவதாகச் சொன்னார்கள். பல துறை அரசு அலுவலகங்களும் இயங்கி வரும் இந்த வளாகத்திற்குள் இன்னும் நிறைய அலுவலகங்கள் வந்து சேரப்போவது குறித்து மகிழ்ந்தும் வியந்தும் நாங்கள் மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த பலநாட்களில் மஞ்சள் பைக்காரரும் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.

எங்கள் அலுவலக வளாகம் நூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. மொத்தக் கட்டிடங்களும் நாலு அல்லது ஐந்து ஏக்கர்களுக்குள் என்றால் மீதி தொண்ணூற்றைந்து ஏக்கர்களில் செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் பேர் தெரியா மரங்களும் தான். வெள்ளைக்காரன் காலத்திற்கு முந்தைய அரசர் அல்லது சிற்றரசர் கால வளாகம் இது. திசைக் கொன்றாய் எட்டு பிரம்மாண்ட வாசல்கள். தர்பாராகவோ அந்தப் புரங்களாகவோ இருந்ததையெல்லாம் கலெக்டர் அமரும் அறையாகவோ விவசாயத்துறைக் கிடங்குகளாகவோ மாறியிருந்தன.

வளாகத்தின் வடகிழக்கில் இரண்டாள் உயரத்திற்குக் கரையான் புற்றும் சுற்றிலும் இடுப்பளவிற்குக் குத்துச் செடிகளும் அடர்ந்து கிடந்தன. தெற்கே காம்பவுண்டுச் சுவருக்கு மேலும் அடியிலும் மயில் கூட்டம் திரியும் வடதிசையில் சூரிய வெளிச்சம் படாது அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சப்தம் காதைப் பிளக்கும் ஆடைக்கும் கோடைக்கும் புல் மண்டிக் கிடக்கும் இந்தப் பிரதேசமெங்கும். கட்டிட வாசல்களின் நிழல்களில் புல் பத்தை பத்தையாய்க் கிடக்கும். அதனால் இந்த வளாகத்தில் கால் நடைகளின் புழக்கம் அதிகம். வளாகத்தைச் சுற்றி வீடுள்ளவர்கள் இங்குள்ள புள் படுகைகளை நம்பி மாடு ஆடு வளர்த்து வருகிறார்கள்.

இந்தக் கால்நடைகள் பெரும்பாலும் அலுவலக வாசல்களிலும் கேன்டான் ஓரங்களிலும் மனிதர்கள் நடமாடும் பகுதியாகப் பார்த்துத்தான் மேய்ந்து கொண்டும் உலாவிக் கொண்டும் திரியும். வெளி மாநிலக்கார ஒரு ஐ.ஏ.எஸ் இங்கு கலெக்டராக வந்தவர் பி.ஏ.வைக் கூப்பிட்டுக் கோபமாய் இரண்டு தகவல்களைச் சொன்னாராம். முதலாவது இந்த வளாகத்தினுள் அலையும் மனிதர்களை விடவும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். இரண்டாவது அவர் காருக்குக்கூட இடம் தராமல் அந்த ஒல்லித் தார் ரோடின் குறுக்கே வரிசையாய்ப் படுத்துக்கொண்டு ஆரன் ஒலிகளுக்கு மதிப்புத் தராமல் அசை போட்டபடி படுத்துக் கிடந்தன என்றாராம். அந்தக் கோபத்தோடு பல உத்தரவுகளையும் போட்டார்.

அந்த உத்தரவுகளின் படி ஆடு மாடு எதுவும் வளாகத்திற்குள் வரமுடியாதவாறு வாசல்களில் இரும்புக் குழாய்கள் பதிக்க வேண்டும். மீறி நுழையும் கால் நடைகளைப் பவுண்டில் அடைக்க வேண்டும். கால்நடை சொந்தக் காரர்கள் அபராதம் செலுத்திய பின்னர் தான் விடுவிக்க வேண்டும்.

மேற்கண்ட உத்தரவுகள் போர்க்கால வேகத்தில் அமுல் படுத்தப்பட்டன. சரியாக ஒரு மாதங்கழித்து மாடுகளும் ஆடுகளும் உள்ளே ராஜநடை போட்டன. வாசலில் பதித்த கம்பிகளின் மேல் நடக்கப் பயின்று விட்டனவாம்.

ஒரு கோர்ட்டிலிருந்து இன்னொரு கோர்ட்டிற்கு நடந்து செல்லும் நீதிபதிகளுக்கு பத்தடி முன்னால் ஆள்களை விலகச் சொல்லி அதட்டிக்கொண்டு ஓடும் டவாலிகளுக்கு இந்த ஆடுகளும் மாடுகளும் பெரும் இடையூறாயிருந்தன. அதிகாரிகள் காரிலிருந்து இறங்கி சட்டென்று அலுவலகப் படிகளில் ஏற முடியாதவாறு இவை பலநேரம் வழி மறித்தன.

எங்களது ஒரு மரத்தடிக் கூட்டத்தின் போது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரப் போகும் மாதங்களில் நாங்கள் நடத்தவிருந்த வேலை நிறுத்தம் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டிருந்தபோது மஞ்சள் பைக்காரர் வெகு அக்கறையோடு எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அந்த மாதத்தில் ஒரு திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலக வாசலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட வரிசையில் அவர் நிற்பதைப் பார்த்தேன். அன்று நாங்கள் மரத்தடிக்கு வரும் நேரத்தில் அவரும் திரும்பிவிட்டார். முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் என்று மறுபடி மறுபடி மூர்க்கமாய்ப் பேசியவைகளைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டுப் போனார்.

அலுவலகங்களையெல்லாம் மூடிவிட்டு நாங்களும் பள்ளிகளையெல்லாம் மூடிவிட்டு ஆசிரியர்களும் கலந்து நின்று வளாக முகப்பில் ஆர்ப்பரித்ததை தினமும் நின்று பார்த்துச் சென்றார். அப்போது மஞ்சள் பையில் ஒரு காது அறுந்து இன்னொரு காதோடு முடிந்திருந்தார். சட்டை வேட்டி நைந்து போயிருந்தது. பலநாள் போராடிவிட்டு உச்சகட்டமாய் சென்னை முற்றுகைக்காகக் கிளம்பும் கூட்டம் வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தபோது அவர் தலைப்பாக்கட்டி தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

போராட்டம் முடிந்து நாங்கள் அலுவலகங்களைத் திறந்து உள்ளே போய் உட்கார்ந்துவிட்டு உற்சாகமாய் மரத்தடிக்கு வந்த போது அவர் எங்கிருந்தோ வந்துவிட்டார். இத்தனை நாட்களாய் அவர் இந்த மஞ்சள் பையோடு எங்கே இருந்திருப்பாரென்று எங்களில் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக அங்கு கூடுகிற எல்லோருக்கும் அவர்மேல் ஒருவித வெறுப்பு வந்திருந்தது.

அவர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார். எங்களுக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லாமல் ஆக்கி விடுகிறார். எங்கள் ஆசைகள், தவறுகள், தேவைகள், குளறுபடிகள் எல்லாமே அவருக்குத் தெரிந்து விடுகின்றன. அவரோடு சண்டை உருவாக்கி அவரை எங்கள் கூட்டங்களின் போது வந்து நிற்பதைத் தடுக்கவும் எங்களால் முடியவில்லை. எவ்வித சண்டைக்கும் கோபத்திற்கும் இயலாத தேகமும் முகமும் அவருக்கு.

பல அலுவலகங்களின் வாயில்களில் தலையில் சிவப்பு விளக்கோடு கார்களும் ஏராளமான ஜீப்களும் தடபுடலாய்த் தெரியும். முந்தைய வாரத்திலோ மாதத்திலோ நடந்த வேலைகள் பற்றி அடிக்கடி ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும். சிமிண்டுக் கலர் சபாரி அணிந்து கனத்துப் போன அதிகாரிகள் உடம்புகளைத் தூக்கிக்கொண்டு வேகம் வேகமாய்ப் படி ஏறுவார்கள். இந்த ஜீப்புகளுக்கு நடுவில் மஞ்சள் பைக்காரர் அலுவலக முகப்புகளை வெறித்து பார்ப்பதை சில தடவைகள் அந்தப்பக்கமாய்ப் போகும் போது வரும்போது பார்த்திருக்கிறேன்.

வரவர அவர் வெகுவாய் மெலிந்து கொண்டு வந்தார். தலைத் துண்டை எடுத்துஅடிக்கடி முகத்தைத் துடைத்தார். மரத்தடிக் கூட்டத்திற்கு வருவது மட்டும் நிற்கவில்லை.

ஒருநாள் மரத்தடியில் நின்று கொண்டிருக்கையில் ஒரு ஆடு சுவரருகில் அடுக்கியிருந்த செங்கல் குவியலில் ஏறியது; அப்படியே சுவர்மேல் நடந்தது. அடுத்த வக்கீல்கள் கூடத்து ஓட்டு மேல் நின்று அங்குப் பரவிக்கிடந்த மரக்கிளைகளில் புத்தம் புதிதாய்ப் பூத்திருந்த மஞ்சள் பூக்கள் ஒவ்வொன்றாய் தின்று கொண்டிருந்தது. 'இதுக அக்ரமம் தாங்கலைப்பா. இங்க பாரு ஆட்டுக்கு ரெக்கை முளைச்சு மேலே போய் ஓட்டிலே நிக்கிறதெ ' என்றார் ஒருவர்.

ஒரு சினை ஆடு மேலே நின்ற ஆட்டை ஆர்வமாய்ப் பார்த்தபடி ஓரத்தில் வளர்ந்து கிடந்த புல் கத்தையைக் கடித்துக்கொண்டு நின்றது.

மாநாடு முடிந்து கூட்டமாய் வரும்போது கீழே நின்ற சினை ஆடு எங்கள் முன்பாக திணறியபடி நடந்தது. சுற்றிச் சுற்றி வந்தது. எங்கள் கூட்டம் அதை நெருங்குமுன் ஆட்டின் பின்புறத்தில் பச்சைக் குட்டியின் தலை தெரிந்தது. பேண்ட்டும் சட்டையும் கடிகாரமுமாய் நின்ற எங்கள் கூட்டத்திற்கு என்ன உதவி செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.

வேறு திசையில் ஒரு வக்கீல் பின்னால் பேசியபடி போய்க் கொண்டிருந்த மஞ்சள் பைக்காரர் ஆடு நின்ற நிலையைப் பார்த்து விட்டு ஓடி வந்தார். தலைப்பாவை இறுக்கக் கட்டிக் கொண்டார். குட்டி வெளியில் வர உதவினார். குட்டியின் மேலிருந்த திரவத்தை வழித்துவிட்டு குட்டியின் நான்கு கால்களிலுமிருந்த குளம்பைக் கிள்ளி எறிந்து தரையில் விட்டார்.

குட்டி ஆடியது. விழுந்து எழுந்தது. எழுவது விழுவதுமாயிருந்தது. ஆடு குட்டியை நக்கிக் குடுத்தது. மஞ்சள் பைக்காரர் ஆட்டின் கனத்த மடியில் குட்டியை விட்டார். சிறிது நேரமானதும் குட்டியைத் தூக்கிகொண்டார். ஆடு நடந்த திசையில் குட்டியைக் கையிலேந்திக் கொண்டு நடந்தார். யார் வீட்டு ஆடோ வீடு வரை கொண்டு போய் விட்டு வருவாரென்று பேசிக் கொண்டோம். மஞ்சள் பை முழங்கையில் ஒற்றைக் காதோடு ஆடிக்கொண்டே போனது.

எங்கள் கூட்டத்தில் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் யாருக்கும் கேட்டுவிடாத மெல்லிய குரலில் முதன்முதலாய் வாய் திறந்து சொன்னார். 'ஆட்டுக்கு என்ன செய்யணும்னு இந்தாளுக்குத் தெரியுது. இந்தாளுக்கு என்ன வேணும்னு யாருக்குமே தெரியலை. '

***************

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்