Aug 2, 2009

அப்பாவிடம் என்ன சொல்வது ?-அசோகமித்திரன்

அசோகமித்திரன் - கனவு - 1993 

இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும் பெட்டி படுக்கை மூட்டையைத் தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் அடியெடுத்து வைத்த போது அவர்கள் தகவல் விசாரிப்பதற்கு யாரும் கண்ணில் படவில்லை. 

fater

கிழவி அங்குமிங்கும் பார்க்க, அப்பெண் கேட்டாள், 'பொட்டியிலே என்னதான் வச்சிருக்கே பாட்டி ? ' 

'கை வலிக்கிறதா ? என் கிட்டே கொடு, நான் தூக்கிக்கிறேன் ' என்றாள் கிழவி. 

'நீதான் ரெண்டு மூட்டையைத் தூக்கிண்டிருக்கியே ? ' 

'உனக்கு வீட்டுக்குப் போகப் பஸ் இருக்கா ? ' 

'இருக்கு, பாட்டி. இல்லேன்னாக் கூட நடந்து போயிடுவேன் ' 

'இந்த இருட்டிலே தனியா நடந்து போகக்கூடாது. ' 

'இப்போ தனியாத்தானே வந்திருக்கோம். ' 

'உன் அப்பன் இன்னும் வீட்டுக்கு வரலியே ? என்னைப் போ போன்னு சொல்லிட்டு ரயிலேத்தக்கூட வரலே. ' 

பெண் பேசாதிருந்தாள். 

பிளாட்பாரத்து டாக்கடை உள்ளடங்கி இருந்தது. அருகில் இருந்த பத்திரிக்கைகள் கடையில் ஆள் இல்லை. 

'அந்த டாக்கடையிலே போய்க் கேட்டுண்டு வா. கன்யாகுமரி ரயில் இங்கே தானே வரதுன்னு ' பெண் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு டாக்கடைக்குள் சென்றாள். கிழவி பெட்டி மீது அவளுடைய இரு மூட்டைகளையும் வைத்தாள். 

கிழவியின் மூச்சு சர்புர்ரென்று இரண்டடி தூரத்திலும் கேட்கும்படி இருந்தது. 

'இங்கேதானாம் ' பெண் வந்து சொன்னாள். 

'அப்படியே போய் பெண்கள் பெட்டி எங்கே நிக்கும்னும் கேட்டுண்டு வந்துடு. ' 

பெண் முகத்திலொரு கீறல் சிணுங்கல் தெரிந்தது. அந்த டாக்கடைக்குத் தனியாக அந்த வேளையில் ஒரு பெண்ணை அனுப்பக்கூடாது. 

'நீ நில்லு. நான் போய்க் கேட்டுண்டு வரேன். ' அந்த கிழவி அசைந்து அசைந்து நடந்து போனாள். அவள் கால்களின் வலி அந்த நடையிலிருந்து தெரிந்தது. 

'வா, அந்தக் கோடிக்குத்தான் போகணுமாம். ' என்றாள். அவளே பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். திடாரென்று சற்றுக் குளிர ஆரம்பித்தது. நிலையக்கட்டிடத்தையும் தாண்டி பிளாட்பாரத்தை மட்டும் நீளப்படுத்தியிருந்தார்கள். அங்கு தலைக்கு மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டிருந்தது. இருபுறமும் திறந்த வெளி. குளிர். 

பிளாட்பாரத்தின் கோடியை அடைந்தபிறகுதான் கிழவி நின்றாள். இப்போது நிலையத்தில் சிறிது மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. எல்லாம் பத்து இருபது பேர்களுக்குள் அடங்கிவிடும். 

'நீ போடி பெண்ணே, நான் பாத்துக்கறேன் ' 

'போறேன், பாட்டி. ரயில் வரட்டும். ' 

'ரயில் வந்து நீ போகறதுக்குள்ளே இன்னும் ராத்திரியாகிவிடும். இவ்வளவு நேரமானதே சரியில்லை. உன்னை நான் கூட வரவே சொல்லலே. ' 

'நீ எப்படி பாட்டி எல்லாத்தையும் ஒண்டியாத் தூக்கிண்டு வந்திருக்கே! ' 

'நான் இங்கே வரப்போ எப்படித் தூக்கிண்டு வந்தேனோ அப்படி. இப்படி தூக்கி தூக்கிப் பழக்கம் ஆயிடுத்து. ' 

'ஆனாலும் உன் பொட்டி ரொம்ப கனம், பாட்டி. ' 

'அதுதான் நான் தூக்கிக்கறேன்னேன். நீ பிடிவாதமா அதையே தூக்கிண்டே. ' 

'மதராஸ்ஸே பெங்களூர் ஆனேவாலே பெங்களூர் எக்ஸ்பிரஸ்... ' என்று தெளிவற்ற கரகரத்த குரலில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்தது. பெண் பாட்டி ரயில் வரதாம் ' என்றாள். 

'இது இங்கே வர ரயில். போறது இல்லை. ' 

'உனக்கு எப்படிப் பாட்டி உடனே தெரிஞ்சுடறது ' 

'இதெல்லாம் தெரியறதுடி பெண்ணே, நான் எங்கே இருக்குறதுன்னுதான் தெரியலே ' 

'எங்களோடேயே இருந்திடலாமே, பாட்டி ' 

'நீ சொல்லிட்டா ஆயிடுத்தா ? ' பாட்டி பெட்டி மீது உட்கார்ந்தாள். திடாரென்று அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள். 

'இதோ பாரு இதோ பாரு... ஏன் அழறே ? என்ன ஆச்சு ? அழாதே அழாதே. ' பெண் தொடர்ந்து அழுது கொண்டு இருந்தாள். 

'அழுகையை நிறுத்து. கண்ணோல்லியோ ' 

பெண் மிகவும் சிரமப்பட்டு அழுகையைச் சற்றுக் குறைத்துக் கொண்டாள். 'எனக்கு ரொம்ப துக்கமா இருக்கு, பாட்டி ' என்றாள். 

கிழவி பேசாதிருந்தாள்.அவர்கள் அருகே ஒரு குடும்பம் வந்து சேர்ந்தது. கணவன், மனைவி, இரு குழந்தைகள். பத்து வயதுக்குட்பட்ட இரு சிறுவர்கள், ஒரு சிறுமி, ஒரு கைக்குழந்தை கிழவியையே பார்த்தபடி இருந்தது. மனைவி தன் கைக்குழந்தையைக் கணவனிடம் கொடுத்தாள். கிழவியைப் பார்த்து 'லேடாஸ் கம்பார்ட்மென்ட்தானே ? ' என்றாள். 

'ஆமாம். ' 

'கன்யாகுமரி வண்டிதானே ? ' 

'ஆமாம். ' 

'கூட்டமாக இருக்குமா ? ' 

'இந்த வண்டியிலே, ரொம்ப ஜனம் ஏறதில்லை. இரட்டையா ? ' 

'ஆமாம். ' என்று சோர்வோடு அப்பெண்மணி சொன்னாள். கிழவியை, 'பேத்தியா ? ' என்று கேட்டாள். 

'ஆமாம். பிள்ளை முனிரெட்டிப்பாளையத்திலே இருக்கான். அவன் பொண்ணு ? ' 

'எங்கே அழைச்சுட்டுப் போறீங்க ? ' 

'நான் அழைச்சுட்டுப் போகலே. என்னை ரயிலேத்தி விட வந்திருக்கா. ' 

அப்பெண்மணியின் கணவன், 'ரொம்ப லேட்டாயிடுமே ? ' என்றான். 

'நான் வேண்டாம் வேண்டாம்னுதான் சொன்னேன். பிடிவாதமா வந்தா. ' 

'முனிரெட்டிப்பாளையத்திலே எங்கே ? ' 

'மார்க்கெட்டுக்கு முன்னாலே. சுடுகாடு இருக்கில்லே. அதுக்குக் கொஞ்சம் பக்கத்துலே. ' 

'நான் கொண்டுபோய் விட்டுட்டுப் போறேன். ' 

பெண், 'வேண்டாம், வேண்டாம். நானே போய்க்கிறேன், ' என்றாள். 

கிழவி அந்த மனிதனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். அந்த மனைவி சொன்னாள். 'நீங்க இங்கிருந்தே நேரே உங்க டூடிக்குப் போறதுக்குத்தான் டைம் இருக்கும்.. அவருக்கு இன்னிக்கு நைட் டூடி. ' இதைக் கிழவியைப் பார்த்துச் சொன்னாள். 

பிளாட்பாரத்தில் இப்போது நிறைய மனிதர்கள் வந்து விட்டார்கள். மனைவி கிழவியைக் கேட்டாள். 

'ரொம்ப ஜனம் இருக்காதுன்னீங்களே ' 

'இவுங்க மெட்ராஸ் வண்டிக்குப் போறவங்க. இப்போத்தான் இங்கே இரண்டு மூன்று வண்டி வருமே ' 

'உங்களுக்கு எல்லாம் தெரியுது. ' 

கிழவி தன் பேத்தி முகத்தைப் பார்த்தாள். பேத்திக்கு மீண்டும் குப்பென்று அழுகை வீரிட்டது. கிழவி அவளை அணைத்தபடி ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்றாள். 

'நீயும் நானும் அழுது என்ன புண்ணியண்டா, கண்ணா ? ' என்றாள். 

'அப்பா அம்மா ஏன் அப்படி இருக்காங்க பாட்டி ? ' என்று பேத்தி அழுதுகொண்டே கேட்டாள். 

'என்னாச்சு ? அவங்க நல்லாத்தான் இருக்காங்க. குடும்பக் கஷ்டம் அப்படி. ' 

'இல்லே பாட்டி. நீங்க எங்க கூடவே இருந்திடலாம், இல்லையா ? போ போன்னுட்டாங்களே ? ' 

'சே சே! நான் போறேன்னு கிளம்பிட்டேன். நீ மனசிலே ஒண்ணும் வச்சிக்காதே கிளம்பு. இவங்க கூட நான் ரயிலேறிப்பேன். தனியாய்ப் போய்டுவேல்லே ? ' சிறுமி கண்ணைத் துடைத்துக் கொண்டாள். 'நான் போயிட்டு வரேன், பாட்டி ' என்றாள். கிழவி அவளை அழைத்து ஒரு முத்தம் கொடுத்தாள். 

அந்த ஆள், 'நான் பாப்பாவைக் கொண்டு போய் விட்டுடறேங்க ' என்றான். 

கிழவி, 'வேண்டாம். அவ போயிப்பா. முனிரெட்டிப்பாளையம் மெயின் ரோட்டிலே போனா ஒன்னும் பயமேயில்லே ' என்றாள். 'நீ போயிட்டு வா. அப்பா, அம்மாகிட்டே வரேன்னுதான் சொன்னான். வரலே. என்ன வேலையோ ? ' 

கண்களையும், கன்னங்களையும் துடைத்துக் கொண்டு அப்பெண் பாட்டியைப் பார்த்தவண்ணம் நகர்ந்தாள். பிளாட்பாரத்தில் மணியடித்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஒலிபெருக்கியில் ஒரு ரயில் வரப்போகும் செய்தி வந்தது. கிழவி அருகில் நின்ற குடும்பத்தின் தலைவன் குழந்தையை மனைவியிடம் கொடுத்துவிட்டு பெட்டியையும் பையையும் கையில் எடுத்துக்கொண்டான். தன் பெட்டி மூட்டைகளை ஒரு சேர வத்த கிழவி திடுக்கிட்டாள். அவள் பேத்தி மீண்டும் வந்து விட்டாள். 'என்னடாது ? ' என்று கிழவி கேட்டாள். 

'உன்னை ரயிலேத்திட்டே போறேன் பாட்டி. ' 

கிழவி கண்ணில் முதல் தடவையாக ஈரம் தெரிந்தது. 

மிகவும் மெதுவாக ஒரு ரயில் வந்து சேர்ந்தது. கிழவியுடன் நின்ற குடும்பம் ரயிலில் ஏறத் தயாராக இருந்தது. கிழவி மட்டும் சந்தேகத்துடன், 'இது கன்யாகுமரி திருப்பதி வண்டியான்னு கேட்டுக்குங்க ' என்றாள். அவள் சந்தேகம் சரிதான். அது திருப்பதி போகும் வண்டிதான். வழக்கத்தை விட அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. 

அந்த குடும்பத்தின் தலைவன், 'அப்போ நம்ம வண்டியும் லேட்டுத்தான் ' என்றான். பிறகு அவன் மனைவியிடம் 'நீ வண்டி ஏறிக்கிறியா ? இதோ இங்கே பெரிய அம்மாவும் இருக்காங்க. நான் டூடிக்குக் கிளம்பறேன், ' என்றான். 

அவன் மனைவி அரை மனதாக 'சரி ' என்றாள். 

அவன் கிழவி பக்கம் திரும்பி, 'பாப்பா வீட்டுக்குப் போகுதா ? நான் கொண்டுபோய் விட்டுட்டுப் போறேன். வரியா பாப்பா ? ' என்றான். 

கிழவி தன் பேத்திக்கு மட்டும் தெரியும் வண்ணம் தலையை அசைத்தாள். 'அவ அப்பன் வரேன்னுருக்கான். அதோ அங்கே தூரத்திலே வராப்பிலே இருக்கு ' என்று கூறினாள். சிறுமி கிழவி பார்த்த திசையில் பார்த்தாள். அவள் முகத்தில் யாரையும் அடையாளம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

கடைசியாக கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் வந்தபோது ஒன்பதேகாலுக்கும் மேலாகிவிட்டது. பிளாட்பாரத்தில் இப்போது சென்னை வண்டிக்காகக் காத்திருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஒரு சில இடங்களில் குவிந்திருந்தார்கள்.அவர்கள் ஏற வேண்டிய பெட்டிகள் அந்த இடங்களில்தான் நிற்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். கன்யாகுமரி ரயிலில் பெண்கள் பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை. கிழவி தன்பெட்டிமூட்டைகளுடன் ஏறும் போதே இரட்டைக் குழந்தைக்கரியும் இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறினாள்.கிழவிக்கு ஜன்னலருகே இடம் கிடைக்காத போதிலும் ஒரு ஜன்னலருகே முகத்தை வைத்துக்கொண்டாள். பேத்தியை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டி முகத்தைப் பார்க்க அச்சப்படுவதுபோல் பேத்தி வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். ரயில் நகரத்தொடங்கியபோது கிழவி 'இந்தா, இதை வச்சிக்கோ, ' என்றாள். பேத்தி அவளையுமறியாமல் கையை நீட்டினாள். கிழவி பேத்தி கையில் பத்து ரூபாய் நோட்டை வைத்து மூடினாள். 

'உங்கிட்டேயே ஒண்ணும் கிடையாதே பாட்டி ? ' என்று பேத்தி சொன்னாள். 'எனக்கு எல்லாம் இருக்கு. பத்திரமா வீட்டுக்குப் போ ' என்று கிழவி பதிலுக்கு கத்தினாள். பெண் ரயிலுடன் ஓடிவர முயன்றாள். ஆனால் மூன்று நா™ அடிகள்தான் நடக்க முடிந்தது. ரயில் போய் விட்டது. 

பெண் விடுவிடென்று நடந்து பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்தாள். 'பாட்டி போயாச்சா ? ' என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பினாள். அவள் அப்பா. 'ஏம்ப்பா உள்ளே வரலே ? ' என்று கேட்டாள். 

'பிளாட்பாரம் டிக்கெட் வாங்கலே. ரொம்ப கூட்டமா இருந்தது ' அவளும் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கவில்லை. அதை அவள் அப்பாவிடம் சொல்லவில்லை.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

மனு - தமிழ்ப் புதிர்கள் on October 9, 2012 at 3:21 PM said...

கனமான கதை

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்